டீசல் விலையை குறைக்கக்கோரியும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 192 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் அந்நாட்டு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. பராமரிப்பு இல்லாத நிலையில், தமிழர்களின் படகுகள் அனைத்தும் சேதமடைந்து வருகின்றன. இதனிடையே, வரலாறு காணாத வகையில் டீசல் விலை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் சங்க பிரதிநிதிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நேற்று முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்களின் வேலை நிறுத்தம் இன்று 2-வது நாளாக தொடரும் நிலையில், 850க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, ஏழாம் தேதி, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.