தமிழகத்திற்கே தலைகுனிவு – மு.க.ஸ்டாலின்

373

அமைச்சர், காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் நடைபெறும் சிபிஐ சோதனையால், தமிழகத்திற்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குட்கா ஊழல் தொடர்பாக நடைபெறும் ரெய்டு வரவேற்கத்தக்கது தான், இருப்பினும், அமைச்சர், காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் நடைபெறும் சிபிஐ சோதனையால், தமிழகத்திற்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குட்கா ஊழல் புரிந்ததற்காக சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டும் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் இனி ஒரு நிமிடம் அந்த பதவியில் நீடித்தாலும் அது மக்களாட்சிக்கும் நேர்மை நியாயத்திற்கும் மிகப்பெரிய இழுக்கு என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,

உடனடியாக அவர்களை பதவி நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட வேண்டும், அப்படி செய்யாவிட்டால், ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். குட்கா விவகாரத்தில் சிபிஐ மேற்கொண்டுள்ள சோதனையை வரவேற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ், அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்காமல் காப்பாற்றி வருவதன் மூலம் பழனிசாமி தலைமையிலான அரசு ஊழல் அமைச்சர்கள் பதவி காக்கும் அரசு என்பது உறுதியாவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.