ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்ப சதி நடப்பதால், மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

276

ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்ப சதி நடப்பதால், மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு வருபவர்களாலும், இந்தப் போராட்டத்தின் மூலம் அரசியல் லாபம் அடையலாம் என நினைத்தவர்களாலும், ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெறுவதை
சகித்துக் கொள்ள முடியவில்லை என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தியபோதும், எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் போராட்டம் தொடர்வதாகவும், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் போராட்டங்கள் அமைதியாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரயில் மறியல், பேருந்து மறியல் உள்ளிட்ட செயல்களில் மாணவர்கள் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என்றும், பாமக நிறுவனர் ராமதாஸ் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.