தமிழகத்திற்கு தண்ணீர் பிச்சை தருவதாக கர்நாடக அரசு நினைத்து கொண்டிருக்கிறது – பாமக நிறுவனர் ராமதாஸ்

222

குறுவை பாசனத்திற்கு தேவையான தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அணைகளில் கடந்த ஆண்டு இருந்ததைவிட, 10 மடங்கு கூடுதலாக நீர் இருப்பு உள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு மறுப்பதில் இருந்து, நீதிமன்ற தீர்ப்புகளை அம்மாநில அரசு மதிப்பதில்லை என்பது தெளிவாகிறது என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தை காவிரியில் சமஉரிமை கொண்ட மாநிலமாக பார்க்க மறுக்கிறது என்று கூறியுள்ள அவர், தமிழகத்திற்கு தண்ணீர் பிச்சை தருவதாக கர்நாடக அரசு நினைத்து கொண்டிருக்கிறது என வருத்தம் தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு வடிவம் கொடுத்தால்தான், சிக்கலை தீர்க்க முடியும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடகத்தின் சார்பிலான உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, குறுவை பாசனத்திற்கு தேவையான தண்ணீர், தமிழகத்திற்கு வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.