சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ராவ் கைது ஆகிறார், பறிமுதல் ஆன ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் முடிவு.

281

ராமமோகனராவ் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகள், அதன் அடிப்படையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவ் வீடு, மகன் விவேக் வீடு உள்பட 13 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் நடத்திய திடீர் சோதனையில் ஏராளமான தங்க நகைகளும், கட்டு கட்டாக புதிய ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள், லேப்-டாப், சி.டி.க்கள் ஆகியவற்றையும் வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அங்கு சிக்கிய ராவின் டைரியில் முக்கிய பிரமுகர்கள் பெயர்களும், பண பரிவர்த்தனை தொடர்பான குறிப்புகளும் எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்து வரும் அதிகாரிகள், ராம மோகனராவுடன் கூட்டு சேர்ந்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்த முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், 20 கம்பெனி துணைராணுவப்படைகள் சென்னை வந்துள்ளன. இந்த துணைராணுவத்தினர் பாதுகாப்பில் வருமானவரித்துறை சோதனைகள் நடைபெறும் என தெரியவந்துள்ளது.

இதனிடையே, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமமோகனராவ் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வைத்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் எந்த நேரமும் விரைவில் சோதனை நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.