தீவிரவாதிகளின் மிரட்டல் காரணமாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

167

தீவிரவாதிகளின் மிரட்டல் காரணமாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
சார்க் உறுப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு இஸ்லாமாபாத்தில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளார். ஆனால், காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு ராஜ்நாத் சிங்கின் நிர்வாகத்திறமையின்மையே காரணம் எனக்கூறி, அவரது பாகிஸ்தான் பயணத்துக்கு ஜமாத் உத் தாவா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் பயணத்தை தடுக்கும் வகையில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் பயணத்தை ராஜ்நாத் சிங் தவிர்க்கவேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், இந்தியாவின் நிம்மதியை சீர்குலைக்கும் பாகிஸ்தானுடன் நமக்கு எந்த ஒட்டும், உறவும் வேண்டாம் எனக்கூறியுள்ளார். சார்க் மாநாட்டால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை என தெரிவித்துள்ள அவர், மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான ராஜ்நாத்சிங், இது குறித்து தெளிவான முடிவை எடுப்பார் என நம்புவதாக கூறியுள்ளார். இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி, தீவிரவாதி ஹபீஸ் சையீத் விடுத்துள்ள மிரட்டல் செய்தியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். எனவே, பாகிஸ்தான பயணத்தை ராஜ்நாத் சிங் தவிர்க்கவேண்டும் என்றும அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.