ஜாதி, மத சங்கங்கள், அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராக சேர அனுமதியில்லை..!

138

ஜாதி, மத சங்கங்களிலோ, அமைப்புகளிலோ உறுப்பினர்களாக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராக சேர முடியாது என்று ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ தங்களின் வாகனங்களில் மன்ற கொடியை நிரந்தரமாக பொருத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ஜாதி, மத சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ, அமைப்புகளிலோ உறுப்பினர்களாக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராக சேர அனுமதியில்லை என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மன்ற பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே பொறுப்புகள், பதவிகள் வழங்கப்படும் என்றும், மன்ற உறுப்பினர்கள் ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும் எனவும் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது என்று கூறியுள்ள அவர், சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடும் போது கண்ணியம் காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.