தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நாளை டெல்லி பயணம்!

677

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தேதியை இறுதி செய்வது குறித்து முடிவு செய்வதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நாளை டெல்லி செல்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட தினகரன் வாக்காளர்களுக்கு பண வழங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நாளை டெல்லி செல்கிறார். அப்போது, ஆர்.கே.நகர் தேர்தல் தேதி தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.