டிஜிபி ராஜேந்திரன் முதலமைச்சருடன் சந்திப்பு : பதவியில் இருந்து விடுவிக்குமாறு கூறியதாக தகவல்

179

குட்கா ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக முன்வந்துள்ள நிலையில் அவரது ராஜினாமாவை ஏற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ள குட்கா ஊழல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை சூடு பிடித்துள்ளது. ஒரேநாளில் அமைச்சர் விஜயபாஸ்கர் காவல்துறை அதிகாரிகள் ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட பலரின் இல்லங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். 35 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையை தொடர்ந்து குட்காவின் ராஜா என்று அழைக்கப்படும் மாதவராவ் உள்ளிட்ட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக் சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதாகவும் அப்போது தம்மை பதவியில் இருந்து விடுவிக்குமாறு கூறியதாகவும் தெரிகிறது. ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்து விட்டார் என்றும் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன