கேரளாவில் மீட்புப்பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயார் – உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

159

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்தததை அடுத்து கேரளாவில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியது. இதனால் நேற்று முன் தினம் இடுக்கி அணையின் ஒரு வாயில் திறக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து கனமழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்தது. இதனை அடுத்து இடுக்கி அணையின் 5 வாயில்களும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பெரியார் ஆற்றங்கரையோரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இதனால் மீட்பு பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது.மேலும் மீட்புப்பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயார் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி அளித்துள்ளார். இதனிடையே, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நாளை அவர் நேரில் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.