கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தொடர் மழை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 – ஐ தாண்டியது

168

கர்நாடகா, கேரளா மாநிலங்களில் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130-ஐ தாண்டியது.

கர்நாடகத்தில் பெலகாவி, பாகல்கோட்டை, உப்பள்ளி-தார்வார், குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மேலும் சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருப்பதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகத்தில் கனமழை-வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே தீர்த்தஹள்ளி தாலுகா ஹெகலாட்டியில் பாதிக்கப்பட்ட இடங்களை அம்மாநில முதல்வர் எடியூரப்பா நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக மத்திய அரசு உடனடியாக 10 ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதேபோல் தொடர் மழையால் கேரளாவில் பல்வேறு இடங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் சாலைகள், குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு செய்தார். இதனிடையே மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியிடப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் குழுவினர் மீட்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.