தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை..!

763

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தலைநகர் சென்னையில் நேற்று மாலை கனமழை கொட்டித்தீர்த்தது. கீழ்ப்பாக்கம், எழும்பூர், அமைந்தகரை, சென்ட்ரல், ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு வரை மழை விட்டு விட்டு பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் சுற்று வட்டார பகுதிகளில் 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதே போல், வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் நேற்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.

இதனால் நியூ டவுன் பகுதியில் உள்ள பாலத்தில் மழை வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில், இன்றும் நாளையும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது