வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை …!

672

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆசனூர் மலைப்பகுதியில், பெய்த தொடர் கனமழையால் கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. கேர்மாளம் கோட்டாடை, அரேப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால், வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஒங்கல்வாடி கிராமத்தில் உள்ள குளம் நிறைந்ததையடுத்து, கரையில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் தாழ்வான பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதேபோன்று மேற்கு தொடர்ச்சி மலை, நீலகிரி மற்றும் வெள்ளியங்கிரி மலை, அட்டப்பாடி பகுதியிலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிறைந்து, உபரி நீர் 12 ஆயிரம் கனஅடியாக பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஒடந்துறை, சிறுமுகை உள்ளிட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக, மஞ்சளாறு அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில், 55 அடியை எட்டியுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணைக்கு வரும் நீர் இரண்டு மதகுகள் மூலம் முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.