சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு வடமாவட்டங்களில், அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் சாறல் மழை..!

382

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து, விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியின் முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், விராம்பட்டிணம் போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.சென்னையில் அதிகாலை முதலே, தூறல் மழை பெய்து வருகிறது. வடபழனி, அசோக் நகர், தி.நகர், அண்ணா சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாறல் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையுடன் கால்வாய் நீரும் கலந்து ஓடுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. மானாவாரி பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த மழை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று திடீரென மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே, அரசம்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி அருகே நெடுஞ்சாலையில் புளியம்மரம் ஒன்று சாலையில் சாய்ந்தது. இதனால் தருமபுரி – திருப்பத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதேபோன்று கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது.இதனிடையே, காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு சேலம், ஈரோடு உள்ளிட்ட வடமாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.