இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை..!

172

சென்னையில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததது. அதன் படி சென்னை அண்ணா சாலை, பாரிமுனை, அடையாறு, வடபழனி, போரூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்படைந்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதே போன்று, நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அவலாஞ்சி, அப்பர் பவானி அணைகள் முழுக்கொள்ளளவை எட்டின. இதனால், இரு அணைகளில் இருந்தும் 450 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

கிளன்மார்கன் அணையும் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல்லையில் வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரியின், பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இதே போன்று, சிதம்பரம், வேலூர், ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்தது.