ரெயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் | அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!

86

சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக, அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
8 நாட்களாக நீடித்த போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து பேருந்துகள் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து பொங்கல் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சென்னை நகரில் 4 இடங்களில் சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் செண்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக போலீஸார் அதிகளவில் பணியில் உள்ளனர்.இந்நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பொங்கலுக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதாக சுட்டிக் காட்டினார். மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியின் பரிந்துரையை ஏற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.