பொது பட்ஜெட்டுடன் சேர்ப்பு: ரெயில்வே பட்ஜெட் ஒழிப்பு! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!

199

ஆண்டுதோறும் ரெயில்வேக்கு என தனியாக பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கம். பொதுபட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டை சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஆண்ட காலத்திலிருந்து ரெயில்வேக்கு என தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு ரெயில்வே பட்ஜெட்டை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மத்திய அரசின் முடிவு அமலாக்கப்படும் பட்சத்தில், சுரேஷ் பிரபு தாக்கல் செய்த இந்த ரெயில்வே பட்ஜெட்தான் இறுதி ரெயில்வே பட்ஜெட்டாக இருக்கும்.
பிரதமர் நரேந்திரமோடி நிர்வாக ரீதியாக பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். ரஷ்ய பாணியிலான திட்டக் கமிஷனை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இந்த திட்டக் கமிஷனால் ஆக்கப்பூர்வ பயன் எதுவும் இல்லை என்று கருதிய பிரதமர் நரேந்திரமோடி, திட்டக் கமிஷனுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதற்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
விவேக் தேவ்ராய்:
பிரதமர் நரேந்திரமோடி நல்கிய ஆலோசனையின்படி நிதி ஆயோக், ரெயில்வேக்கு என தனி பட்ஜெட் தேவைதானா? என்பது குறித்து பல்வேறு கோணங்களிலும் அலசி ஆராய்ந்தது. நிதி ஆயோக் உறுப்பினர் விவேக் தேவ்ராய் தலைமையிலான குழு, ரெயில்வேக்கு என தனி பட்ஜெட் தேவையில்லை. இதை மத்திய பொது பட்ஜெட்டுடன் சேர்த்துவிடலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
அடுத்த ஆண்டு முதலே இதை அமலாக்க மத்திய அரசு விரும்புகிறது என்று பொருளாதார வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
போர்க்கொடி:
ரெயில்வேக்கென தனி பட்ஜெட் இருப்பதால் அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு பணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. முழு அளவிலான பொருளாதார அணுகுமுறையை நடைமுறைப்படுத்த இயலவில்லை. எத்தனையோ முக்கியத்துறைகள் உள்ளன. ஆனால், அவற்றுக்கெல்லாம் தனி பட்ஜெட் என எதுவும் கிடையாது. இப்படி இருக்கும்போது ரெயில்வேக்கு மட்டும் தனி பட்ஜெட் என்ற நடைமுறையை வரைமுறையின்றி நீட்டித்துக் கொண்டே போவது ஏற்புடையதல்ல. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
கடந்த காலத்திலும் இத்தகைய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், ரெயில்வேக்கு தனி பட்ஜெட் என்ற நடைமுறை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வற்புறுத்தியதால் ரெயில்வே பட்ஜெட்டை ஒழிக்க இயலவில்லை. நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ள போதிலும் இந்த யோசனையை இன்னும் 8 மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்துவது சாத்தியம்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரெயில்வேக்கென தனி பட்ஜெட் சமர்ப்பிப்பது தொடர்ந்து நீடிக்க வேண்டும். ரெயில்வே பட்ஜெட்டை ஒழிக்க முற்படுவது கண்டனத்துக்குரியது என தொழிற்சங்கத் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.