ரெயிலில் இருந்து தவறி விழுந்து பிளஸ் டூ மாணவர் பலி! அரூர் அருகே பரிதாபம்!!

212

அரூர், ஜூலை.24–
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரெயில் நிலையத்தில் தவறி விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி மாணவர் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் திங்கள்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன் ஜெயசூர்யா (18). கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த இவர் தற்போது மருத்துவ படிப்பில் சேர முயற்சி எடுத்து வந்தார். இது தொடர்பான பணிக்காக தாய் கலைச்செல்வியுடன் மோகன் ஜெயசூர்யா சேலத்தில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை சென்றார்.
மோகன் தன் தாயுடன் முன்பதிவு பெட்டியில் பயணித்தார். அதே ரெயிலின் பொதுப் பெட்டியில் மோகன் நண்பர் கவி சங்கர் பயணம் செய்தார். அவரை சந்திக்க, தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது மோகன் இறங்கியுள்ளார். தான் பயணிக்கும் பெட்டிக்கு வருமாறு கவி சங்கரை மோகன் அழைத்துள்ளார். இருவரும் பெட்டிக்குள் ஏற முயன்ற போது ரெயில் கிளம்பியது. அப்போது எதிர்பாராத விதமாக மோகன் ஜெயசூர்யா வண்டியில் இருந்து தவறி விழுந்து ரெயில் சக்கரத்தில் மாட்டிக் கொண்டார். ரெயில் சக்கரத்தில் மாட்டி கால், கை துண்டாகிய நிலையில் மோகன் ஜெயசூர்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைக் கண்ட ரெயில் பயணிகள் ரெயிலின் அபாய சங்கிலியை இழுத்தனர். அதற்குள் ரெயில் சில கிலோ மீட்டர் தூரம் சென்று நின்றது. இந்த ரெயில் சக்கரத்தில் சிக்கி மோகன் உயிரிழந்ததை அறிந்த அவரது தாயார் கலைச்செல்வி கதறி அழுதார். இந்த விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.