இரண்டாவது நாளாக எஸ்.பி.கே நிறுவன குழும நிறுவனங்களில் ஐடி ரெய்டு தொடர்கிறது..!

91

மதுரை, அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே. குழும நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அருப்புக்கோட்டையை சேர்ந்த செய்யாதுரை என்பவர், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில், வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, இவருக்கு சொந்தமான எஸ்.பி.கே. கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும், சென்னையில் அண்ணா நகர், போயஸ் கார்டன், மயிலாப்பூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மதுரையில் எஸ்.பி.கே நிறுவனத்திற்கு சொந்தமான ஓட்டலில் நடத்திய சோதனையில், சுமார் 160 கோடி ரூபாய் பணம் மற்றும் 100 கிலோ தங்கம் சிக்கியது. இதனையடுத்து, நிறுவனத்திற்கு சொந்தமான 30 வங்கி கணக்குகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழமன்னார்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. நிறுவன உரிமையாளரின் வீட்டில் நேற்று இரவு வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிறகு சில ஆவணங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அதிகாரிகள் சென்றனர்.

இந்தநிலையில், எஸ்.பி.கே. குழும நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.