எஸ்.பி.கே. நிறுவனத்தில் 5-வது நாளாக வருமான வரி சோதனை..!

440

அருப்புக்கோட்டையில் உள்ள ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீடு மற்றும் அலுவலகங்களில் 5 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவடைந்துள்ளது.

அருப்புக்கோட்டையை சேர்ந்த நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். இதில், 180 கோடி ரூபாய் ரொக்கம், 105 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, செய்யாத்துரை, அவரது மகன்கள் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோரிடம் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, செய்யாத்துரை அலுவலகத்தை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து, செய்யாத்துரையின் மகனும், நிறுவனத்தின் இயக்குனருமான நாகராஜை வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை அழைத்து வந்துள்ளனர். அவரிடம் நடத்தப்படவுள்ள விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.