இஸ்தான்புல்நகரில் தங்கியுள்ளார் துருக்கியில் ராகுல் ஓய்வு! மியான்மர் செல்லவும் வாய்ப்பு!!

218

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அவர் திடீரென வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். சில வாரங்கள் அவர் எங்கே இருக்கிறார் என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் உடல் நலம் திருப்திகரமாக இல்லை. முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக சோனியா விரும்புகிறார். வெகுவிரைவில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்பார் என்று தெரிகிறது.
இம்மாதம் 19–ந் தேதி ராகுல் 47–வது வயதில் அடியெடுத்து வைத்தார். அவரது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்டோர் அவருக்கு சமூக ஊடகம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்த நாள் கொண்டாட்டம் முடிவடைந்த பிறகு, ராகுல் வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார். அவர் எங்கே சென்றார் என்பது பற்றிய தகவல் உடனடியாக வெளியாகவில்லை. அவர் டர்க்கிஸ் ஏர்லைன்ஸ் வாயிலாக துருக்கியில் உள்ள இஸ்தான்புல்நகருக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. வெளிநாட்டில் தங்கியிருக்கும் போது எனக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை என்று கருப்புப் பூனை படையினருக்கு அவர் தகவல் அனுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி அடுத்த மாதம் முதல்வாரம் இந்தியாவுக்கு திரும்புவார் என்று தெரிகிறது. அவர் துருக்கியிலேயே தொடர்ந்து தங்கியிருப்பாரா அல்லது மியான்மருக்கு செல்வாரா என்பது பற்றி முரண்பாடான தகவல்கள் கசிந்துள்ளன. அவர் மியான்மருக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று கருதப்பட்ட போதிலும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை.