பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தேசிய பேரிடர் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சாடல் …!

455

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தேசிய பேரிடர் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கட்சியின் உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துக்கொண்டனர். முன்னதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்ட நவம்பர் 8ஆம் தேதியை கருப்பு தினமாக காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் அன்றைய நாளில், கூட்டணி கட்சிகளுடன் எந்த முறையில் போராட்டங்களை நடத்துவது என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி-யால் ஏற்பட்ட பாதிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதுதவிர, குஜராத், இமாசல பிரதேச சட்டசபை தேர்தல்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி என மத்திய அரசு இரண்டு தவறுகளை செய்துள்ளதாக கூறினார். இதனால், நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்த நவம்பர் 8ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாகவும், இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாநிலந்தோறும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, மக்களிடம் நேரடியாக விளக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.