அழகான தமிழ் மொழியை பா.ஜ.க அரசு நசுக்க பார்க்கிறது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு ..!

615

இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்தபோதிலும் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் மாநாட்டில், உரையாற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வங்கிகளில் பணத்தை கொள்ளையடிப்பவர்களை மோடி அரசு காப்பாற்றி வருவதாக குற்றம்சாட்டினார். ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு உள்ளதாக கூறினார். இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்தபோதிலும் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாகவும் கூறினார். பா.ஜ.க என்பது ஒரு அமைப்பின் குரல் என்றும், ஆனால் காங்கிரஸ் கட்சி ஒரு நாட்டின் குரல் எனவும் தெரிவித்தார். பிராந்திய மொழிகளை மோடி அரசு ஒடுக்குவதாகவும், அழகான தமிழ் மொழியை பா.ஜ.க சிதைத்து வருவதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசும் போது, 14 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது மன்மோகன் சிங்கின் மிகப்பெரிய சாதனை என குறிப்பிட்டார். மக்களை வறுமையில் தள்ளியது தான், பாஜக அரசு அவர்களுக்கு செய்த அநீதி என குற்றம் சாட்டினார்.
முன்னதாக மாநாட்டில் பேசிய மன்மோகன்சிங், 2 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தது, என்ன ஆயிற்று என அவர் கேள்வி எழுப்பினார்.