இந்தியாவில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சகிப்பின்மை நிலவுகிறது – ராகுல் காந்தி

69

இந்தியாவில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சகிப்பின்மை நிலவுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 2 நாட்கள் பயணமாக ராகுல் காந்தி துபாய் சென்றார். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அவரை வரவேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். அவர்கள் ராகுல் காந்தியை வரவேற்றனர். பின்னர், அங்குள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் திரண்டிருந்த வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசுகையில், துபாயில் உள்ள பெரிய பெரிய கட்டிடங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் கட்டமைப்பு உள்ளிட்ட கட்டிடங்கள் இந்திய தொழிலாளர்களின் பங்களிப்பு இல்லாமல் உருவாகியிருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டை சகிப்புத்தன்மை ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சகிப்பின்மை நிலவி வருகிறது என்று ராகுல்காந்தி தெரிவித்தார். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும், முதல் நடவடிக்கையாக ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றும் ராகுல்காந்தி கூறினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன்சாண்டி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டர்.