மீனவ மக்களுக்கு நீதி கிடைக்க சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் கொடுக்கும் : ராகுல்காந்தி

520

மீனவ மக்களுக்கு நீதி கிடைக்க சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் கொடுக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் ஓகி புயல் பேரழிவை ஏற்படுத்தியது. கடலுக்குள் சென்ற மீனவர்களில் 400க்கும் மேற்பட்டோர் இன்னும் கரைத் திரும்பவில்லை. இந்தநிலையில் காணாமல்போன மீனவ குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குமரி மாவட்டம் சின்னத்துறை வந்தார். கடலுக்கு சென்று இதுவரை கரை திரும்பாத மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் புயலில் சிக்கி பலியான மீனவ குடும்பங்களையும் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
அப்போது மீனவர்களை மீட்க உதவுமாறு ராகுல்காந்தியிடம் மீனவப்பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சந்திப்பிற்கு பின்னர், தமிழில் வணக்கம் எனக் கூறி ராகுல்காந்தி தனது பேச்சை தொடங்கினார். நாடு முழுவதும் உள்ள மீனவர்கள் துயரத்தில் இருப்பதாக கூறிய அவர், மீனவ மக்களுக்கு நீதி கிடைக்க சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் கொடுக்கும் என்று தெரிவித்தார்.