அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு பாஜகவை வீழ்த்துவோம் – ராகுல் காந்தி

119

பாஜகவை வீழ்த்த குறைந்த பட்ச செயல்திட்டத்தை உருவாக்க சம்மதம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தலுக்கு முன் கூட்டணியாக செயல்படுவோம் என்பதையும் உறுதி செய்துள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்தரிர் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று திரண்டு கூடி, ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் சீரழித்து, ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பாஜக மற்றும் பிரதமர் மோடியை வரும் மக்களவை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்திய அமைப்புகள் மீது பாஜக நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராக போராட வேண்டும் என்ற பிரதான இலக்குக்கு அனைவரும் ஒப்புக்கொண்டதாகக் கூறினார். குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து ஆலோசனையை தொடங்குவதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறிய ராகுல் காந்தி, ஒன்றிணைந்து செயல்பட்டு பாஜகவை வீழ்த்துவோம் என்கிற அர்ப்பணிப்பு அனைவரிடமும் உள்ளதாகவும் தெரிவித்தார்.