வெள்ள பாதிப்பை அரசியலாக்க விரும்பவில்லை – ராகுல் காந்தி

353

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை அரசியலாக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை பார்வையிட வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேற்று சந்தித்து பேசினார். இரண்டாவது நாளாக இன்றும் ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து வருகிறார்.

கொச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நான் இங்கு ஆறுதல் தெரிவிக்கவே வந்திருக்கிறேன். அரசியல் செய்ய வரவில்லை என்றும், இந்த இயற்கை பேரிடரின் தன்மை குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று கூறிய ராகுல் காந்தி, மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.