தொண்டர்களின் கேள்விகளுக்கு கையில் மைக்கை ஏந்தியபடி மேடையில் நடந்தவாறு ராகுல் பதில்! பா.ஜ.க., சமாஜ்வாடி, ஆம்ஆத்மி மீது பாய்ச்சல்!!

456

லக்னோ, ஜூலை.30–
உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஆயத்தமாகிவிட்டது. லக்னோவில் 80 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றினார். கையில் மைக்கை ஏந்தியபடி மேடையில் நடந்தவாறு தொண்டர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் பா.ஜ.க., சமாஜ்வாடி, ஆம்ஆத்மி கட்சி ஆகியவற்றின் மீது சரமாரியாக தாக்குதல் தொடுத்தார்.
இந்தியாவிலேயே பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். இம்மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. சட்டசபைக்கு 403 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் தற்போது சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அகிலேஷ்யாதவ் முதல்வராக உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் தயாசங்கர் சிங் தரக்குறைவாக விமர்சித்தார். இதையடுத்து பா.ஜ.க.வில் இருந்து தயாசங்கர் சிங் நீக்கப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டுவிட்டார்.
உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சி என 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்றால் ஷீலா தீட்சித் முதல்வராவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தையும் காங்கிரஸ் தொடங்கிவிட்டது. நட்சத்திரப் பிரசாரகராக பிரியங்கா வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் 80ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கையில் மைக்கை ஏந்தியபடி மேடையில் நடந்தவாறு தொண்டர்களின் கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதிலளித்தார்.
அவர் கூறியதாவது:–
பா.ஜ.க. ஆட்சியில் பருப்பு உள்பட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலைவாசி விண்ணை முட்டுகிறது. ஏழை, எளிய மக்களால் இதைய சமாளிக்க முடியவில்லை. அவர்கள் திணறுகிறார்கள்.
ஷீலா தீட்சித்தை உத்தரப்பிரதேச முதல்வர் வேட்பாளராக நிறுத்தியுள்ளதை சிலர் விமர்சித்து வருகின்றனர் என்பது உண்மை தான். அவருக்கு 78 வயதாகிறது என்பதை குறையாக சுட்டிக்காட்டுகிறார்கள். அரசியலில் இளமைதுடிப்பு மட்டுமே வெற்றியை ஈட்டித்தராது. அனுபவமும் தேவை. ஷீலா தீட்சித் மிகுந்த அனுபவசாலி. டெல்லி முதல்வராக திறம்பட பணியாற்றியுள்ளார்.
இப்போது டெல்லியில் என்ன நடக்கிறது. டெல்லி மந்திரிகளும் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களும் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சிறைக்கு செல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை விட்டு இறங்கி 27 ஆண்டுகளாகின்றன. இந்த 27 வருடக் காலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், பா.ஜ.க.வும், சமாஜ்வாடி கட்சியும் உத்தரப்பிரதேசத்தை சூறையாடிவிட்டன. இப்போது நடைபெற்று வரும் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சம் உச்சம் பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் நல்லாட்சி மலர காங்கிரசுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ராகுல் குறிப்பிட்டார்.