பொய்யான வாக்குறுதிகளை பாஜக அரசு அளித்து மக்களை ஏமாற்றி விட்டது – ராகுல் காந்தி

380

மக்களவை தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, முக்கிய பிரச்சினைகளில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பதாக சாடினார்.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், தொழில் அதிபர்களுக்கான அரசாக மோடி அரசு செயல்பட்டு வருவதாக குறை கூறினார். தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதிகள் குறித்து அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, ஜிஎஸ்டி, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரும் இன்னலை சந்தித்ததாக குறிப்பிட்டார். பிரதமரின் புன்னகையில் ஒருவித பதற்றம் தெரிவதாகவும், அவர் உண்மையாக இல்லை என்றும் ராகுல் விமர்சித்தார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டதால், அவையில் சலசலப்பு நிலவியது. இதையடுத்து அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. உரைக்கு பின்னர் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டி தழுவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ராகுலின் பேச்சுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.