சித்தராமைய்யாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை..!

400

காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசை கவிழ்க்கும் நிலையை உருவாக்கக் கூடாது என சித்தராமையாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதற்காக உயர்நிலைக்குழுவில் எடுக்கப்பட்டமுடிவின்படி, மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில், குமாரசாமி அரசின் செயல்பாடுகள் குறித்து, சமீபத்தில் டெல்லி சென்றிருந்த சித்தராமைய்யா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் புகார் தெரிவித்திருந்தார். இதுதவிர, கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களையும் அவர் சந்தித்து பேசிவருவது, பொதுமக்களுக்கு தவறான கருத்தைத் தெரிவிப்பதோடு, கூட்டணிக்குள் தேவையில்லாத குழப்பத்துக்கு வழிவகுத்துள்ளதாக ராகுல் காந்தியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சித்தராமையாவை தொடர்புகொண்ட ராகுல் காந்தி, கூட்டணி அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று கூறியதோடு, மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்கும் நிலையை உருவாக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.