ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை | ரபேல் ஒப்பந்தம் குறித்த அனைத்து விபரங்கள் வெளியாக வாய்ப்பு

167

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மத்திய தணிக்கை துறையின் அறிக்கை மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 2016 ம் ஆண்டு பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில் பாஜக அரசு செய்து கொண்ட ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய தணிக்கை துறையின் அறிக்கை இன்று நடைபெறும் மக்களவை கூட்டத்தில் முன்வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிஏஜி அறிக்கையில் ஒரு விமானத்தின் தனிப்பட்ட விலை என்ன என்பது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து, சிஏஜி அறிக்கை மூலம் ரபேல் ஒப்பந்தம் குறித்த அனைத்து விவரங்களும் வெளியாகிவிடும் என்பதால் இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.