பஞ்சாப் மாநில மக்களவை மற்றும் கேரள சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி!

293

பஞ்சாப் மாநில மக்களவை மற்றும் கேரள சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுனில் ஜாஹர் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார். முதல்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 14 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்ற அவர் தற்போது ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 219 ஓட்டுகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் இரண்டாமிடமும், ஆம் ஆத்மி வேட்பாளர் மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.
கேரள மாநிலம் வெங்கரா சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் காதெர், 65 ஆயிரத்து 227 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இடதுசாரி கூட்டணி வேட்பாளருக்கு இரண்டாமிடமும், பாஜக வேட்பாளருக்கு நான்காமிடமும் கிடைத்துள்ளன. இதற்கு முன்னதாக இதே வெங்கரா தொகுதி முஸ்லிம் லீக்கின் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, பஞ்சாப் மற்றும் கேரள மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.