மத்திய சிறையில், கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா? – அதிரடி சோதனை

182

புதுக்கோட்டை மத்திய சிறையில், கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா? என போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சென்னை புழல் சிறையில் கைதிகள் அனுபவித்து வந்த சொகுசு வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், டிவிக்கள், எப்.எம் ரேடியோ, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இவை எப்படி சிறைக்குள் வந்தன? என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து புழல் சிறையில் இருந்து கைதிகள் மற்றும் அதிகாரிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, சேலம், கோவை, கடலூர், பாளையங்கோட்டை சிறைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதுக்கோட்டை மத்திய சிறையில் இன்று காலை முதல் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டி.எஸ்.பி ஆறுமுகம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதும், சிறைக் கைதிகளிடம் இருக்கிறதா? எனப் போலீஸார் சோதனையிட்டு வருகின்றனர்.