Strike

புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் சாலை போக்குவரத்து ஊழியர்கள் தங்களது 3 மாத சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், பேருந்துகள் அனைத்தையும் பணிமனையில் நிறுத்தியும் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் ஆகிய இடங்களில் அனைத்து அரசுப் பேருந்துகளும் இயக்கப்படாததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, 8 முதல் பத்து லட்ச ரூபாய் வரை புதுச்சேரி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இரண்டாவது நாளான இன்றும் பேருந்துகளை இயக்காமல், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அத்தியாவசிய தேவைகளுக்காகவும், வியாபார விஷயமாகவும் பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் இரண்டாவது நாளாக பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலையில், அரசு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி, சுமுக தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்றும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.