மத்திய அரசைக் கண்டித்து நடைபெறும் தொடர் போராட்டங்களால் புதுச்சேரி மற்றும் தமிழக எல்லை மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது..!

713

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நடைபெறும் தொடர் போராட்டங்களால் புதுச்சேரி மற்றும் தமிழக எல்லை மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தை போல் புதுவையிலும் மத்திய அரசை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்திற்கு ஆளும் கட்சியின் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இந்த முழு அடைப்புக்கு தொழிலாளர், வியாபாரிகள் சங்கங்கள், மற்றும் தொமுச, ஏஐடியூசி, உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில் புதுவையில் எந்த பேருந்துகளும் இயக்கப்பட வில்லை. மேலும் நகருக்குள் இயக்கப்பட்ட தமிழக அரசு பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.இதனிடையே தமிழகத்தில் நடைபெற்று வரும் எதிர்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப் படவில்லை. காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை தமிழகத்திற்குள் கர்நாடகப் பேருந்துகள் இயங்காது என அம்மாநில போக்குவரத்துக் கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.போராட்டம் முன்னதாக அறிவிக்கப்பட்டதால் அதிகளவிலான மக்கள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க இரு மாநில எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.