அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு!

757

அந்தமான் அருகே புயல் சின்னம் வலுத்து வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை சென்னையில் சுமார் ஒரு வாரம் கொட்டியது. இடையில் சில நாட்கள் சென்னையில் வெயில் தலை காட்டி வந்த நிலையில், நேற்று முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மழை பெய்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் மழை பொழிவு அதிகமாக உள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தெற்கு அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் வலுத்து வருகிறது. இதன் காரணமாக, நாளை முதல் 4 நாட்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், இமாசலப்பிரதேசம் மற்றும் லட்சத்தீவிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், மேகலாயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பனிமூட்டம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.