ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி சி41 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

707

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி சி41 ராக்கெட் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
நாவிக் எனப்படும் போக்குவரத்து, கண்காணிப்பு வசதி மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகளுக்கு உதவும் வகையில், 7 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைகோள்களை ஏற்கனவே இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது.
இந்தநிலையில், கடல்சார் கண்காணிப்பு, சாலை போக்குவரத்து மற்றும் வான்வெளி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட முக்கிய தகவல்களை தரும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோளை விண்ணில் ஏவ, 32 மணி நேர கவுண்டவுன் நேற்று முன்தினம் இரவு 8.04 மணிக்கு தொடங்கியது.
இந்தநிலையில், இன்று அதிகாலை 4.04 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு தெரிவித்தார்.