ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் 20 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

200

இஸ்ரோ நிறுவனம் வெளிநாட்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்து வருகிறது. அதன் அடுத்த சாதனையாக 20 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி34 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.26 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதனையடுத்து, 26 நிமிடங்களில் 20 செயற்கை கோள்களும் விண்ணில் விடப்பட்டன.
இந்த ராக்கெட்டுடன் செலுத்தப்பட்ட 20 செயற்கை கோள்களில் இந்தோனேசியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த 17 செயற்கைக் கோள்களும், மேலும் சென்னை சத்தியபாமா பல்கலைக் கழக மாணவர்கள் தயாரித்த சத்ய பாமாசாட், புனே இன்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த ஸ்லயம் ஆகிய செயற்கை கோள்களும் அடங்கும்.
இது தவிர, பூமியை படமெடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட கார்டோசாட்-2 என்ற செயற்கைக்கோளும் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 2008ஆம் ஆண்டில் பத்து செயற்கை கோள்களை ஒரே தடவையில் விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்தது. இதுவரை 20 நாடுகளை சேர்ந்த 57 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி, இஸ்ரோ 100 மில்லியன் டாலர் வருவாயை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருபது செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவது வெற்றிகரமாக நிறைவேறியதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர்.