எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்ய எதிர்ப்பு..!

418

எஸ்.சி., எஸ்.டி.வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 150-க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் போராட்டத்தினால், பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

எஸ்சி/ எஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த போராட்டம் காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ரயில்மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. வன்முறை வெடிக்காமல் இருக்க போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தின் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்குகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள ராஜேந்திர நகர் ரயில் நிலையத்தில் எஸ்.சி, எஸ்.டி தவிர இதர சமூகத்தினர் திரளாக கலந்து கொண்டு ரயில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், மத்திய அரசைக் கண்டித்து, கோஷமிட்டபடி, பேரணியாக சென்றனர். இந்த நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்க, பல்வேறு மாநிலங்களிலும், பாதுகாப்புக்காக, ராணுவ படையினர் மற்றும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.