பிரதமர் பதவியை ஒருபோதும் இழிவுபடுத்தி பேசமாட்டேன்- ராகுல் காந்தி!

342

பிரதமர் பதவியை ஒருபோதும் இழிவுபடுத்தி பேச மாட்டேன் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உறுதிபடக் கூறியுள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அப்போது மக்களிடையே பேசிய அவர், மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதாக தெரிவித்தார். பிரதமர் பதவியை ஒரு போதும் இழிவுபடுத்தி பேசியதில்லை என்று கூறிய அவர், ஆனால் மோடி எதிர்கட்சியில் இருந்த போது அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கை மரியாதை குறைவாக பேசியதை குறிப்பிட்டார். தங்களைப் பற்றி எவ்வளவு மோசமாக மோடி கருத்துரைத்தாலும், தாங்கள் என்றும் எல்லை தாண்டி பேசியதில்லை என்று கூறிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை பற்றி தனிப்பட்ட முறையில் யாரும் விமர்சிக்கக் கூடாது என்று தெரிவித்தார். குஜராத் வளர்ச்சி அடைந்து விட்டது என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் என்று சாடிய ராகுல்காந்தி, குஜராத்தில் 90 சதவீத கல்லூரிகளை பணக்கார முதலாளிகள் தான் நடத்துவதாகவும், சுவிஸ் வங்கியில் பணம் சேர்த்தவர்கள் யாரும் இதுவரை சிறைசெல்லவில்லை என்றும் தெரிவித்தார்.