ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம்…. ஆதார் அட்டை மூலம் பரிமாற்ற முறை இரண்டு வாரங்களில் தொடங்கப்படும் என பிரதமர் மோடி பேச்சு

170

ஆதார் அட்டையை பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்யும் முறை 2 வாரங்களில் தொடங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற டிஜி தன் மேளா நிகழ்ச்சியில், மின்னணு பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் அம்பேத்கர் பெயரில் புதிய மொபைல் செயலியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவித்தவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, பீம் ஆப் எனப்படும் செயலி மூலம் மொபைல் போனில் பண பரிமாற்றம் செய்ய முடியும் என்று தெரிவித்தார். அம்பேத்கர் சிறந்த பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஸ்மார்ட் போன் அவசியமில்லை என்று தெரிவித்த மோடி, மத்திய அரசின் திட்டத்திற்கு இளைஞர்கள் அதிக அளவில் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.

ஆதார் அட்டையை பயன்படுத்தி பெருவிரல் ரேகை பதிவு மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறை 2 வாரங்களில் தொடங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெருவிரல் ரேகை முறை வந்துவிட்டால் பரிவர்த்தனைக்கு மொபைல் போனுக்கு தேவைப்படாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நவீன தொழில்நுட்பம் மூலம் ஏழைகளுக்கு பொருளாதார அதிகாரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். மின்னணு பரிவர்த்தனை மற்றும் தொழில்நுட்பம் குறித்த சந்தேகத்திற்கு தீர்வு ஏற்பட்டு, நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாவது உறுதி என்றும் பிரதமர் மோடி கூறினார்.