குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தமக்கு ஆசானை போன்றவர். பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்.

268

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தமக்கு ஆசானை போன்றவர் என பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் 4 ஆண்டு நிறைவையொட்டி இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இதன் இரண்டாவது கட்டடத்தை பிரணாப் முகர்ஜி முன்னிலையில், பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த 88 ஆண்டுகள் பழமையான குடியரசுத் தலைவர் மாளிகையின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராக பொறுப்பேற்ற போது, டெல்லி தமக்கு புதிய உலகமாக தோன்றியதாக குறிப்பிட்டார். அப்போது, பல்வேறு விவகாரங்களில் தமக்கு ஆசானாக இருந்து வழிகாட்டியவர் பிரணாப் முகர்ஜி என தெரிவித்தார். இருவரின் அரசியல் பின்னணி மாறுப்பட்டவையாக இருந்தபோதிலும், இருவரும் தோளோடு தோள் நின்று செயல்படுவதை தம்மால் உணரமுடிவதாகவும் மோடி கூறினார். மாற்றுக் கட்சி அரசு ஆட்சியில் இருந்தாலும், அதன் திட்டங்கள் அனைத்தையும் குடியரசுத் தலைவரின் திட்டமாக செயல்படுத்தும் பெருந்தன்மை பிரணாப் முகர்ஜிக்கு மட்டுமே உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.