புதிய மற்றும் ஒரே சீரான கல்விக்கொள்கை விரைவில் உருவாக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

286

புதிய மற்றும் ஒரே சீரான கல்விக்கொள்கை விரைவில் உருவாக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடையும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தெலுங்கானா மாநிலத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அடிலாபாத் மாவட்டத்தில் ஆங்கிலேயர் மற்றும் நிஜாமின் அடக்குமுறை கொள்கைகளுக்கு எதிராக போராடிய விடுதலைப் போராட்ட பழங்குடியின வீரர் கொமரம் பீமுக்கு அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து, அவரது குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்திய பிரகாஷ் ஜவடேகர், பின்னர் மத்திய அரசின் புதிய வரைவு கல்விக்கொள்கை தொடர்பாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுடன் கலந்தாலோசித்தார்.
ஐதராபாத்தில் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கை, பொறுப்புடைமை, புதுமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று கூறினார். வரைவு கல்விக் கொள்கை பற்றிய ஆலோசனைகளை அவர் வரவேற்றார். வரைவு பற்றிய கருத்துக்களைத் தெரிவிக்க கடைசி நாள் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய அமைச்சர், புதிய கொள்கை கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்குடையது என்று குறிப்பிட்டுள்ளார்.