நீட் தமிழ் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக அரசு பரிந்துரைத்த மொழிப்பெயர்ப்பாளர்கள் தான் காரணம் – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

311

நீட் தமிழ் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக அரசு பரிந்துரைத்த மொழிப்பெயர்ப்பாளர்கள் தான் காரணம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் மொழிப்பெயர்ப்பு செய்ததில் பெரும் குளறுபடி இருந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்கி மீண்டும் மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட உத்தரவிட்டது.

இந்நிலையில் நீட் தேர்வு தமிழ் வினாத்தாள் குளறுபடி குறித்து மாநிலங்களவையில் அதிமுக எம்.பி விஜிலா சத்தியானந்த் பிரச்சினையை எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக அரசு பரிந்துரை செய்த மொழிப்பெயர்ப்பாளர்களை தான் தமிழ் வினாத்தாள் தயாரிக்க பயன்படுத்தியதாக விளக்கம் அளித்தார். இந்த குளறுபடிக்கு மொழிப்பெயர்ப்பாளர்களே காரணம் என குற்றம்சாட்டிய அவர், இதற்கு மத்திய அரசு பொறுப்பல்ல என்றும் தெரிவித்துள்ளார்.