பொன்னேரியில் பழைய இரும்பு கடையில் நிகழ்ந்த தீவிபத்து காரணமாக அருகில் இருந்த 4 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.

221

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருவாயிற்பாடி சாலையில் உள்ள பழைய இரும்பு கடையில் இரவு நேரத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ கொழுந்துவிட்டு எரிந்து அருகில் இருந்த 4 குடிசை வீடுகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில் பீரோ, கட்டில், மின்விசிறிகள், மரச்சாமான்கள் என 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இந்த சம்பவம் தொடர்பாக பொன்னேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா, மர்ம நபர்களின் நாசவேலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.