பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக கல்லுரிகளில் மண் பானையில் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

393

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தல் கரும்பு பந்தலிட்டு, மண் பானையில், பொங்கல் சமைத்து, பாரம்பரிய முறைப்படி கொண்டாடினர். மேலும் காய்கறிகளைக் கொண்டு கோலமிட்டும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் கொண்டாடி மகிழ்ந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஒன்று திரண்டு, 50 குழுக்களாக பிரிந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். பின்னர் பொங்கல் பானையை சுற்றி ஆட்டம் ஆடி உற்சாகத்துடன் கொண்டாடினர். நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள வி.வி. பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடை அணிந்து மாணவ, மாணவியர் பொங்கல் சமைத்தனர். மேலும், கோலப்போட்டி, நடனப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, வேட்டி, சேலை அணிந்து, பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு கொண்டாடினர். முன்னதாக, கரகாட்டம், ஒயிலாட்டம், புலி வேஷம் ஆகிய நடனங்களுடன் பொங்கல் பானையோடு, முறைபாரி பூஜைப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். மேலும் உரியடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில், சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பெண்களும் கலந்து கொண்டு, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து அசத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பொய்க்கால் குதிரை, பறையாட்டம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மாவட்டம் நெடுங்குன்றம் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கும்மியாட்டம், உரியடி உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், பாரம்பரிய உடை அணிந்து, மண் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.