பயிர்களை அறுவடை செய்யும் பருவமே தை மாதம்

88

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகும். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் எனப்படும். பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். வட மாநிலங்களில் பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள். இன்றைய தினம் சூரியனுக்கு படையலிட்டு வட மாநில மக்கள் கொண்டாடுவார்கள்.