பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து..!

70

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உலகின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தை பிறந்த வழி பிறக்கும் என்பதைப் போல, தை பிறந்து ஆட்சி மாற்றம் நிகழ்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை சுட்டிக் காட்டியுள்ள அவர், தமிழ் மக்களின் வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட தை முதல் நாளை, தமிழர்கள் திருநாளாகக் கொண்டாடப்படுவது தமிழ் மக்களுக்கு பெரும் சிறப்பாகும் என தெரிவித்துள்ளார். அனைவருக்கும் அனைத்தும் தரும் தமிழ்புத்தாண்டு பொங்கலாக மலர வேண்டும் என வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ள தி.க. தலைவர் கி. வீரமணி, சமூகநீதி, பெண்ணுரிமை. மதச் சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை முறியடித்து அனைத்தும தரும் உரிமையுள்ள தமிழ் புத்தாண்டாக மலரும் இந்நாளில் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேபோல், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தை பிறக்கட்டும், தீமைகளில் இருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கட்டும் என கூறியுள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழி, தமிழரின் பாரம்பரிய கலாச்சார பெருமையை பறைசாற்றவும் 3 நாள் கொண்டாட்டமாக உலகெங்கும் கொண்டாடப்படுவதுதான் தமிழர் திருநாள் என குறிப்பிட்டுள்ளார். பாம.க.வின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பொங்கல் திருநாளில் துயரங்கள் விலகி மகிழ்ச்சியும், வளர்ச்சியும் மலரட்டும் என குறிப்பிட்டுள்ளார்.