பொங்கல் பண்டிகை : பேருந்து நிலையங்களில் அலை மோதும் பயணிகள் கூட்டம்

73

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருக்கும் வெளியூர் வாசிகள் தங்கள் ஊர்களுக்குச் செல்வதால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

பொங்கல் விழாவுக்கு வெளியூர் செல்லும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு 24 ஆயிரத்து 708 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் சென்னை கோயம்பேடு, பெருங்களத்தூர்,மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மட்டும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பொங்கல் தினத்தையொட்டி பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு, கே.கே.நகர் பேருந்து நிலையங்களுக்கு செல்ல நேற்றிலிருந்து ஜனவரி14 ம் தேதி வரை 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. பயணிகளின் கூட்டம் அலை மோதுவதால் சிறப்பு கவுண்டர்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதேபோன்று சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் அனைத்து விரைவு ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.