புதுச்சேரியில் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே பேருந்து கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பேருந்து கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கிளம்பிய எதிர்ப்புகளால் விலை ஏற்றம் சிறிதளவு குறைத்துக்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் ஜூன் 23ஆம் தேதி முதல் புதுச்சேரியில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது. அதன்படி உயர்த்தப்பட்ட கட்டணங்கள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால் புதுச்சேரி நகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 5ல் இருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 10ல் இருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராட்டங்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.